உள்ளூர் செய்திகள்

ஏலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரியில் நெடுஞ்சாலை ஓர புளியமரங்கள் ஏலம்: கூட்டணி போட்டு ஏலம் எடுத்த தி.மு.க.-அ.தி.மு.க. ஒப்பந்ததாரர்கள்

Published On 2022-06-15 14:34 IST   |   Update On 2022-06-15 15:49:00 IST
  • ஏலம் போட்டியால் 20 லட்சத்தில் இருந்து 30 லட்சத்தை எட்டியது.
  • ஏலம் எடுப்பதற்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்து அரசு நிர்ணயித்த தொகையுடன் 10,000 ரூபாய் மட்டும் சேர்த்து ஏலம் கோரப்பட்டு முதல் மூன்று கட்ட பகுதிகளை தி.மு.க. பெற்றுக்கொண்டது.

தருமபுரி,

தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையை (4 வழிச்சாலை) விரிவுபடுத்தும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியில் இருந்து சிக்கலூர் வரை செல்லும் சாலையை விரிவு படுத்தும் பணிக்காக சாலையோரம் உள்ள 1456 புளிய மரங்களை வேருடன் வெட்டி அகற்றும் பணிக்காக தர்மபுரி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் டெண்டர் விடப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது.

இந்த டெண்டர் பணிக்கு மொத்தம் 202 பேர் ஏலம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் தருமபுரி நெடு ஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர்ஜெய்சங்கர் தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது.

இதில்தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் வழியில் உள்ள மொரப்பூர் சாலையில் 3.8 கிலோமீட்டர் தூரத்தில் சாலை யோரங்களில் உள்ள 201 புளிய மரங்களை வெட்டி எடுப்பதற்காக அரசு நிர்ணயம் செய்த தொகை ரூ.13.92 லட்சமும் அதே சாலையில் 3 கிலோமீட்டருக்கு சாலையில் உள்ள 198 புளிய மரங்களை வெட்டி எடுப்பதற்கு ரூ.12.39 லட்சமும், மற்றும் அதே சாலையில் 3.6 கிலோமீட்டர் சாலையில் உள்ள 297 மரங்களை வெட்டி எடுக்க ரூ.5.99 லட்சத்திற்கும்,

அரூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள தானிப்பாடி சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு இடையில் உள்ள 254 புளிய மரங்களை வெட்டி எடுப்பதற்கு ரூ்.12.73 லட்சத்திற்கும் அதே சாலையில் உள்ள அரூர்- தானிப்பாடி வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையில் உள்ள புளிய மரங்களை வெட்டி எடுப்பதற்கு ரூ.20.44 லட்சத்திற்கும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏல மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 6 கட்டமாக உள்ள புளிய மரங்களை ஏலம் எடுப்பதற்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்து அரசு நிர்ணயித்த தொகையுடன் 10,000 ரூபாய் மட்டும் சேர்த்து ஏலம் கோரப்பட்டு முதல் மூன்று கட்ட பகுதிகளை தி.மு.க. பெற்றுக்கொண்டது. அடுத்து மூன்று கட்ட பகுதிகளுக்கு அ.தி.மு.க. தலா பத்தாயிரம் ரூபாய் வைத்து இரண்டு கட்ட பகுதிகளை ஏலம் பெற்றது.

மூன்றாவது நிலையான 265 புளியமரங்கள் 20.44 ரூபாய்க்குமேல் அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு பத்தாயிரம் ரூபாய் வைத்து ஏலத்தில் எடுக்க முயன்றபோது பா.ம.க.வை சேர்ந்த பிரமுகர்கள் மேற்கொண்டு ஏலத்தை எடுக்க முற்பட்டனர். இந்த ஏலம் போட்டியால் 20 லட்சத்தில் இருந்து 30 லட்சத்தை எட்டியது. அப்போது ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் ஏலம் கோருவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இந்த முயற்சி வீண் போனதால் வாக்குவாதமாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்து றையினர் அவர்களை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்திய பிறகு ஏலம் நடத்தப்பட்டு, அ.தி.மு.க.வினர் 32.14 லட்சத்திற்கு ஏலத்தை முடித்துக் கொண்டனர்.

அரூரில் இருந்து சிக்கலூர்வரை உள்ள திருவண்ணாமலை சாலையில் 1456 புளிய மரங்கள் உள்ளன, இந்த மரங்கள் அனைத்தும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் ஆகும், ஒவ்வொரு மரமும் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும் மதிப்பு உடையது, இந்த மரங்களை மதிப்பீடு குறைத்து டெண்டர் விடப்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ஒரு கோடிக்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

வெளிப்படையான ஏலம் என்று கூறிவிட்டு நெடுஞ்சாலைத்துறை உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.

ஏலம் எடுத்த நபர்கள் 1456 புளிய மரங்களை இன்று மறு ஏலம் விடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இந்த 1456 மரங்களும் குறைந்தபட்சம் அரசு நிர்ணயித்த தொகையிலிருந்து ஒரு கோடிக்கு மேல் வெளிச்சந்தையில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News