உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தது- வீடுகள் இடிந்து சேதம்

Published On 2025-04-07 10:58 IST   |   Update On 2025-04-07 10:58:00 IST
  • 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
  • பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.

ஆனால் மாலை நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூரில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம், நம்பியூர் சூரியம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 5 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் மரங்கள் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

குறிப்பாக சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

குப்பிபாளையம் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டு இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

இதேபோல் நம்பியூர் அடுத்த காந்திபுரம் மேடு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரம் முறிந்து கழிப்பறை மீது விழுந்தது.

இதனால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அதே சமயம் சூறாவளிக்காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே. புதூரை சேர்ந்த ராசு என்பவர் தோட்டத்தில் 500 கதளி ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதே போல் வட்டக்காடு கிராமத்தில் நிர்மல்குமார் என்பவர் தோட்டத்தில் 100 செவ்வாழைகள், அதே பகுதியில் குமார் என்பவர் தோட்டத்தில் 400 செவ்வாழை மரங்கள், முத்தரசன் குட்டையில் தேவராஜ் என்ற ஒரு தோட்டத்தில் 100 கதளி வாழை மரங்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முடிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

களம்பூர் மலைப்பகுதிகளும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அனைத்தரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் 4 மின்கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. கடம்பூர் மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதே போல் பர்கூரின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் கனமழை பெய்தது. இதில் ஓசூர், கொங்காடை, செங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் அருகே உள்ள மண் ரோடு சேரும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது.

அப்பகுதி மக்கள் உதவியுடன் மினி பஸ் மீட்கப்பட்டது. அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கவுந்தப்பாடி, வரட்டு பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் இருந்தது. இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

Tags:    

Similar News