மாமல்லபுரத்தில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கை- டி.ஜி.பி பி.கே.ரவி நேரில் ஆய்வு
- மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கும் பணிகள் குறித்து டிஜிபி நேரில் பார்வையிட்டார்.
- தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 1234 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் டி.ஜி.பி பி.கே.ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மீட்பு கருவிகளை இயக்கி சோதனை செய்தார்.
மழை வெள்ளத்தில் சிக்குவோருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சைகள் என்ன? மேலும் அவர்களை மீட்கும் பணிகள் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டார்.
பின்னர் டி.ஜி.பி பேசுகையில், 'தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 1234 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை சேதமோ, உயிர்ப்பலியோ ஏற்படவில்லை' என தெரிவித்தார். பின்னர் இங்கிருந்து செய்யூர், கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றார்.