மதுராந்தகம், மேல்மருவத்தூரில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை
- மதுராந்தகம் பகுதியில் சாரலாக நீடித்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது.
- மழை பெய்து ரம்மியமான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.
மதுராந்தகம் பகுதியில் சாரலாக நீடித்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீ ர்த்தது. இதேபோல், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடுமையான கோடை வெயில் இருந்த நிலை மாறி இந்த மாதம் தொடக்கத்திலேயே மழை பெய்து ரம்மியமான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.