உள்ளூர் செய்திகள்

காய்கறி விற்க வந்தபோது கைவரிசை: போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர் கீழே விழுந்து காயம்

Published On 2022-12-26 12:13 GMT   |   Update On 2022-12-26 12:13 GMT
  • பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார்.
  • முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தங்கரத்தினம் (43), காய்கறி வியாபாரி. இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் பகுதியில் வியாபாரம் செய்ய சென்றார். அப்போது வசந்தாதேவி (73) என்ற மூதாட்டி இவரிடம் மொச்சைக்கடலை வாங்கி உள்ளார்.

பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது தங்கரத்தினமும் அவர் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெளிகதவை பூட்டிவிட்டனர்.

இதனால் தங்கரத்தினம் வசமாக சிக்கி கொண்டார். பின்னர் அவரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ்காரர்கள் முனிபாண்டி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோர்ட்டு அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

சிவகாசி-களத்தூர் சாலையில் அவர்கள் வந்த போது தங்கரத்தினம் தப்பிப்பதற்காக முனிபாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீஸ்காரர் முனிபாண்டி மற்றும் பின்னால் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணன் ஆகியோர் தங்கரத்தினத்தை பிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த தங்கரத்தினம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ்காரர் முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News