ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி தீப்பிடித்தது
- விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் நிறுவன ஊழியர். இவர் சிவகாசிக்கு சென்று விட்டு மனைவி குழந்தையுடன் காரில் இன்று காலை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை-காந்தி சாலை சந்திப்பில் வந்தபோது சிக்னல் போடப்பட்டு இருந்தது. வரிசையாக வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன.
அப்போது ஸ்ரீதர் வேகமாக ஒட்டிவந்த கார் சிக்னலில் நிற்காமல் முன்னால் நின்றிருந்த கார் மற்றும் அதற்கு முன்னால் நின்றிருந்த தனியார் சினிமா நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மீது அடுத்தடுத்து மோதியது.
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீதர் ஓட்டி வந்த காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது.
விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை மடக்கி தண்ணீர் ஊற்றி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் காரின் முன்பகுதி எரிந்து பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து காரணமாக தாம்பரம்-குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் பற்றிய தீ அருகில் நின்றிருந்த மற்ற வாகனங்களுக்கு பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.