உள்ளூர் செய்திகள்

புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்

Published On 2022-08-16 10:30 GMT   |   Update On 2022-08-16 10:30 GMT
  • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த போவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆர்ப்பாட்டம்
  • சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குழப்பமான மனநிலை மக்களிடையே நீடித்து வருகிறது.

மேலும் மாவட்டத்திலேயே பசுமை நிறைந்த பகுதியாக ஏகனாபுரம், நாகப்பட்டு ,நெல்வாய் உள்ளிட்ட கிராமங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் தமிழக அரசு கையகப்படுத்த போவதாக மக்களிடையே தகவல் வெளியானதை அடுத்து மேற்கண்ட கிராமங்களில் அப்பகுதி மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விமான நிலையம் வருவதை கண்டித்து இக்கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனையொட்டி மேட்டு பரந்தூர், நாகப்பட்டு ,காட்டுப்பட்டூர், நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும், சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு அவர்கள் ஒப்புதலுடன் கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியாக கருதப்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News