சேதமடைந்த நெற்பயிர்களை பி.ஆர்.பாண்டியன் ஆய்வு செய்தார்.
அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
- அரசு நேரடி நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து கோட்டூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.
இந்த ஆய்வின் போது விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.