உள்ளூர் செய்திகள்

ஊட்டி பக்காசூரன் மலை கிராமத்துக்கு அரசு பஸ் சேவை தொடக்கம்

Published On 2023-06-03 09:13 GMT   |   Update On 2023-06-03 09:13 GMT
  • இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
  • தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் பக்காசூரன் மலைக் கிராமம் உள்ளது.

இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவ, மாணவிகளில் பலர் குன்னூரில் படிக்கின்றனர்.

கிராமத்தினரும் அடிக்கடி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பக்காசூரன் கிராமத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே பக்காசூரன் மலைகிராமத்துக்கு அரசு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சாலை அமைக்கப்பட்டது.

இருப்பினும் அங்கு பஸ் சேவை தொடங்கவில்லை.. இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.

இதனை தொடர்ந்து பக்காசூரன் மலைக்கு பஸ் சேவை தொடங்குவது என்று போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.

இதன்படி அங்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்காசூரன் கிராமத்துக்கு தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா. உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பொதுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News