உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் விலையில்லா சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

'மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான்' - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Published On 2023-07-19 08:39 GMT   |   Update On 2023-07-19 08:39 GMT
  • ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.
  • நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு 950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மாணவ- மாணவிகளின் நலனில் அக்கறைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறிவு தெய்வம் என்பார்கள் உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள் தான். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது. இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். கல்வி என்ற படிப்போடு பொது அறிவையும் வளர்த்துகொள்ள வேண்டும். நல்ல நூல்களையும் தினசரி நாளிதழ்களையும் படித்து நல்ல பல தகவல்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் படித்த காலத்தில் இதுபோன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ, மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் மெட்டில்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பாஸ்கர், மணி, அல்பட், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News