சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் அரசு பஸ்.
பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து மாணவர்கள் படுகாயம்
- இன்று காலை வழக்கம்போல் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பூதலூர்:
பூதலூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருவெறும்பூரில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பத்தாளபேட்டை, கடம்பகுடி, மேகளத்தூர், மாறனேரி ,ஊரத்தூர், ஆற்காடு வழியாக திருக்காட்டுபள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த பஸ்சில் நாராயணன் ஓட்டுனராகவும், ரெங்கராஜ் கண்டக்டராகவும் இருந்தனர்.
இன்று காலையும் வழக்கம் போல் பஸ் புறப்பட்டு சென்றது. காலை நேரம் என்பதால் பஸ்சில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ் பூதலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தின் அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த சுபலட்சுமி (19). ஸ்ரீராம்,(17) வர்ஷினி (12)சுபஸ்ரீ (14)பிரணவ் (14)அபிஷேக்(14) கனிலா(51) சுரேஷ்(52) சமீரா பேகம் (50)மகேஸ்வரி (37) எடிசன்(15) ரம்மி (52) கடல் மணி (50) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 17 பேர் மாணவர்கள் ஆவார்.
இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்தவர்களை தஞ்சை ஆர்டி ஓ (பொறுப்பு) பழனிவேல் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.