உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த பெண்ணை கைது செய்ததால் ரகளை: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட்

Published On 2025-04-22 23:24 IST   |   Update On 2025-04-22 23:24:00 IST
  • சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி-தம்மம்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பகலில் மது விற்றது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி ஜெயசித்ரா (35) என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது அங்கு வந்த சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராஜா மற்றும் அவரது நண்பர்களான ஜெயச்சந்திரன் (51), நீலகண்டன் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ஜெயச்சந்திரன் அரசு போக்குவரத்து கழகத்தில் தம்மம்பட்டி பணி மனையில் கண்டக்டராகவும், நீலகண்டன் சேலம் மெய்யனூர் பணி மனையில் டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து 2 பேரையும் சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News