கார் புரோக்கரை கடத்தி வந்து குடோனில் வைத்து தாக்கிய கும்பல்- சிறுவன் உள்பட 4 பேர் கைது
- சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லை:
கோவை மாவட்டம் ஓரைக்கல்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
தொழில் நிமித்தமாக இவர் நெல்லைக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் மாரியம்மன்கோ வில் தெருவை சேர்ந்த நம்பிராஜன்(31) என்பவர் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து 2 பேரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிவக்குமாருக்கு நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலமாக கார் வாங்குவதற்கு நம்பிராஜன் ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கான தவணைத் தொகையை சிவக்குமார் திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் நேற்று முன்தினம் தனது கூட்டாளிகளான திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த தங்ககிருஷ்ணன் (28), அவரது சகோதரர் விக்ணேஷ்மாரி மற்றும் 17 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு கோவைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.
அங்கு வைத்து சிவக்குமாரை காரில் கடத்தி கொண்டு வந்த அந்த கும்பல் நெல்லை தச்சநல்லூரை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அவரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த வர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் குடோனில் அடைத்து வைத்து தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.