உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.  

நெல்லை மாவட்டத்தில் 109 பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் - சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

Published On 2023-07-15 09:12 GMT   |   Update On 2023-07-15 09:12 GMT
  • பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கேடயம்,பரிசுகள் வழங்கப்பட்டது.
  • மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

நெல்லை:

நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தின விழா மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 7 அரசு பள்ளிகளுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26 அரசு பள்ளிகளுக்கும் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 5 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் ஊக்க தொகையை வழங்கினார். மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பத்தமடை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனது சொந்த நிதியில் வழங்கினார்.

பின்னர் மாவட்ட முழுவதும் 109 அரசு பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 918 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தற்போது ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். காமராஜர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தினார். கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது புகழை என்றும் போற்றுவோம். தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் காமராஜரின் புகழை போற்றும் விதமாக பல்கலைக்கழகங்கள், பள்ளிகளுக்கு அவரது பெயரை சூட்டி வருகின்றனர்.

பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, தி.மு.க மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராசு, மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், நில எடுப்பு டி.ஆர்.ஓ. சுகன்யா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News