திருவள்ளூரில் சூதாட்டத்தை தடுத்த பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்- 4 பேர் கைது
- பெரிய குப்பம் மேம்பாலத்தின் கீழ் 5 பேர் கும்பல் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
- தப்பி ஓடிய பெரியகுப்பத்தை சேர்ந்த கோபியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் பெரிய குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய குப்பம் மேம்பாலத்தின் கீழ் 5 பேர் கும்பல் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த மாதவரம் ரிங் ரோடு பகுதியை சேர்ந்த ஜானகிராமன், சென்னை வெற்றி நகரை சேர்ந்த தமிழ்வாணன், ஸ்ரீதர், பெரிய குப்பத்தை சேர்ந்த முத்து, கோபி ஆகிய 5 பேரும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகி ராமன், தமிழ்வாணன், ஸ்ரீதர், முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய பெரியகுப்பத்தை சேர்ந்த கோபியை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.