மலை கிராமங்களில் பிரசவம், அவசர சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்-கலெக்டர் தகவல்
- மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார்.
- மாவட்டத்தில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான தேவைகள் உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார்.
ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட திட்டக்குழு பேராசிரியர் சீனிவாசன், உறுப்பினர் அமலோர் பாவந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை இயக்குனர்(தரம்) மருத்துவர் மீனாட்சி சுந்தரி, இணை இயக்குனர் மருத்துவர் சதீஷ்ராகவன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். இதில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான தேவைகள் உள்ளது.
இதனால், தமிழக அரசு மக்களைத் தேடி அனைத்து வசதிகளும் சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் நமது மாவட்டத்தில் கெலமங்கலம், தளி, மத்தூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, மேகலசின்னம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி மற்றும் ஓசூர் ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் கிராம சுகாதாரப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கிராம சுகாதாரப் பேரவை மூலம் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மாவட்ட சுகாதார பேரவையில் விவாதிக்கப்பட்டு, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆலோசனைகள் செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே இதன் நோக்கமாகும்.
நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருந்திருந்தாலும் இன்னும் சில மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக கெலமங்கலம் போன்ற மலை கிராமங்களில் பிரசவம் மற்றும் அவசர சிகிச்சைக்கு போதிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது. இது போன்ற சுகாதார சேவைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே முடிவு எடுத்து வந்தனர்.
இந்த சுகாதார பேரவையின் மூலம் தங்களது பகுதிக்கு தேவையான சுகாதார வசதிகள் என்ன தேவை என்பதை மக்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் அவர்களாலேயே இயற்ற ப்பட்டு, இப்பேரவையின் மூலம் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இதனை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கலெக்டர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு மற்றும் மலேரியா எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, தொழுநோய், எய்ட்ஸ் கட்டுப்பாடு, காசநோய், 181 மகளிர் ஹெல்ப்லைன், வளர் இளம் பருவத்தினருக்கான சுகாதார ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.