உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் தீ விபத்து: 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதம்

Published On 2025-04-02 10:31 IST   |   Update On 2025-04-02 10:31:00 IST
  • கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
  • விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை.

விருதுநகர்:

விருதுநகர் சிவன் கோவில் அருகில் பெருமாள் கோவில் தெரு பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தினக் கூலி தொழிலாளர்கள், கட்டிட வேலைக்கு செல்வோர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தூக்கம் கலைந்து அலறி யடித்துக் கொண்டு வெளி யேறினர். ஆனால் அதற்குள் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.

அதிகாலை நேரத்தில் மிதமான காற்றும் வீசியதால் தீயானது மளமளவென பரவி அந்த பகுதியில் அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் தீப்பற்றியது. அப்போது அந்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் அருகில் இருந்த பால் பண்ணையிலும் தீ பரவியது.

உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 3 தீயணைப்பு வாகனங்களில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த விபத்தில் வீட்டிலிருந்து உயிர் தப்பி வெளியே ஓடி வந்த கணேஷ் மூர்த்தி என்பவர் பலத்த காயம டைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தை விருதுநகர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான குடிசை வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Tags:    

Similar News