கோத்தகிரி பகுதிகளில் கேரட்-முட்டைகோஸ் விளைச்சலில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- மலைகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கென எப்போதும் ஒரு தனி கிராக்கியுள்ளது.
- முக்கிய காய்கறிகளாக விளங்கும் கேரட் மற்றும் முட்டைகோஸ் பக்கம் விவசாயிகள் திரும்பியுள்ளனர்.
கோத்தகிரி,
மலை மாவட்டமான நீலகிரியில் மலைகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கென தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கூட எப்போதும் ஒரு தனி கிராக்கியுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு அதிக அளவு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துவதால் சுவைக்கும் தனிச்சிறப்பு உண்டு என்றும் கூட சொல்லலாம்.
இந்த மலைப்பிரதேசங்களில் விளைவிக்கும் காய்கறிகள் பொதுவாக மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்பு அங்கிருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள வியாபாரிகள் அதனை வாங்கி அப்பகுதிகளில் வியாபாரம் செய்வது வழக்கம்.
மலைப்பகுதிகளில் பொதுவாக தண்ணீருக்கு பஞ்சம் இல்லை என்பதால் இது போன்ற காய்கறிகளை விளைவிப்பதில் விவசாயிகளுக்கு சிரமங்களும் ஏற்படுவதில்லை.
சீசனுக்கு ஏற்றது போல் விவசாயிகள் காய்கறிகளை மாறி மாறி விளைவிப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனி காலம் நிறைவடையும் நிலையில் அதற்க்கு ஏற்றது போல் விவசாயிகள் முக்கிய காய்கறிகளாக விளங்கும் கேரட் மற்றும் முட்டைகோஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக இந்த பயிர்களை விளைவித்து வருகின்றனர். இருப்பினும் நீலகிரியில் ஏற்பட்ட பனிபொழிவின் தாக்கம் இந்த முறை சற்று அதிகம் என்பதால் முட்டைகோஸ் பனிப்பொழிவால் சற்று பாதிப்படைந்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் இருப்பினும் விவசாயிகள் இந்த பயிர்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு விளைவித்து வருகின்றனர்.