உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

கூடலூரில் அறுவடை பணி முடியாத நிலையில் தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகள் தவிப்பு

Published On 2023-03-07 09:59 IST   |   Update On 2023-03-07 09:59:00 IST
  • முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
  • கூ:டுதல் தண்ணீர் திறக்கவில்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போக அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. கூடலூர், தாமரைக்குளம், டி.டி.ஆர்.வட்டம், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அறுவடை பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில் முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கும், தேனி மாவட்டம் குடிநீர் தேவைக்கும் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கூடலூர் பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது இப்பகுதி வயல்களில் கருதள்ளக்கூடிய நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்கள் தண்ணீர் திறந்தால் மட்டுமே நெற்கதிர் அறுவடைக்கு தயார் நிலைக்கு வரும்.

எனவே கூடலூர் பகுதி விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் தண்ணீர் திறக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இல்லையெனில் 2-ம் போக அறுவடை பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைபெரியாறு அணையில் தற்போது 118.85 அடி தண்ணீர் உள்ளது. வரத்து 30 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2421 மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 54.92 அடி, வரத்து 222 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 2706 மி.கனஅடி.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயரும் என்றும், ஜூன்மாதம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News