உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அரசு பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திட்டக்குடியில் அரசு பள்ளி மைதானத்தில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும் பணிகளை தடுத்து நிறுத்திய முன்னாள் மாணவர்கள்

Published On 2023-08-08 09:20 GMT   |   Update On 2023-08-08 09:20 GMT
  • புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று இரவு பள்ளம் தோண்டினர்.
  • அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

கடலூா்: 

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று இரவு பள்ளம் தோண்டினர். இந்த மைதானத்தில் இன்று காலை வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொள்ள அப்பகுதியினர் வந்தபோது பள்ளம் தோண்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அறிந்து அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பள்ளம் தோண்டும் பணியினை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். புதிய கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டுவதாக ஜே.சி.பி. எந்திர டிரைவர் கூறினார். அப்போது அங்கிருந்த முன்னாள் மாணவர்கள், இந்த பள்ளி வளாகத்தில் ஏராளமான இடம் உள்ளது. புதிய கட்டிடத்தை அங்கே கட்டாமல், விளையாட்டு மைதானத்தில் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டனர். மேலும், திட்டக்குடி நகரப்பகுதியில் உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இது மட்டும்தான். இதிலும் கட்டிடம் வந்தால், மாணவர்கள் எங்கு சென்று விளையாடுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். 

மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், இது போன்ற நடவடிக்கைகள் தவறாகும் என்று கூறினார்கள். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதுவரை பணிகளை மேற்கொள்ளக் கூடாதன ஒப்பந்ததாரரிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News