உள்ளூர் செய்திகள்

அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும்- நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-06-15 15:18 IST   |   Update On 2022-06-15 15:18:00 IST
  • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது

ஊட்டி;

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் உலக ரத்த கொடையாளர் தினம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 176 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கி காபி ஹவுஸ், மாரியம்மன் கோவில் வழியாக ஊட்டி சேட் மருத்துவமனையில் சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர், 3 முறை மற்றும் அதற்கு மேலாக ரத்த தானம் செய்த 23 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிக முறை ரத்த தானம் செய்த நபர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் என்பது ஒரு உன்னதமான செயல் ஆகும். ரத்த தானம் செய்வது குறித்து உங்களது பகுதியில் உள்ள நண்பர்களிடம் எடுத்துக்கூறி அவர்களும் ரத்த தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மனோ கரி, உறைவிட மருத்துவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News