உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை

Published On 2023-10-17 09:28 GMT   |   Update On 2023-10-17 09:28 GMT
  • குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
  • தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

ஈரோடு, அக். 17-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இரவில் கனமழை கொட்டி தீர்த்தது.

பவானியில் அதிக பட்சமாக 11 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் பெருந்துறை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் நேற்று காலை முழுவதும் மேகம் மூட்டத்துடன் இருந்தது. காலையில் மழை பெய்யவில்லை என்றாலும் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 55.80 மி.மீ மழை பதிவானது.

இதேபோல் கொடுமுடி, கொடிவேரி, பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, சத்தியமங்கலம், நம்பியூர், மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.

இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

குண்டேரிப் பள்ளம்-55.80, கொடுமுடி-42, கொடிவேரி-33, பெருந்துறை-28, கோபி-17.20, அம்மாபேட்டை-17, சத்தியமங்கலம்-13, நம்பியூர்-12, மொடக்குறிச்சி-10, வரட்டுப்பள்ளம்-8.20, ஈரோடு-4, பவானி-2.80.


Tags:    

Similar News