உள்ளூர் செய்திகள்

3 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி

Published On 2023-03-23 15:24 IST   |   Update On 2023-03-23 15:25:00 IST
  • 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 3-வது சுற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:

விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சவாலாக கோமாரி நோய் அமைகிறது. இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும்.

கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தினோம்.

மாவட்ட அளவில் 3 லட்சத்து 34,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்துகள் பெறப்பட்டன. கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் 96 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தினோம்.

இதுவரை 3 லட்சத்து 4,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளோம். அதாவது 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள கால்நடை களுக்கு வரும் 31-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கால்நடை வளர்ப்போர் தவறாமல் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனையை அணுகி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News