உள்ளூர் செய்திகள்

ரெயிலில் 3 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி

Published On 2022-12-12 09:46 GMT   |   Update On 2022-12-12 09:46 GMT
  • வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
  • செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி வசந்தா (72).

நேற்று முன்தினம் வசந்தா தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து எச்.1 என்ற குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலில் இருந்து இறங்கி பெருந்துறை கிளம்பி சென்று விட்டனர்.

வீட்டிற்கு சென்ற பிறகு வசந்தா தான் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு தான் வசந்தா தான் அணிந்திருந்த நகையை ரெயிலில் விட்டு வந்தது பெரிய வந்தது. இது குறித்து அவர் உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைன் 182-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், ரகுவரன் தலைமையில் போலீசார் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் பயணம் செய்த எச் 1 பெட்டியை சோதனையை செய்தனர்.

அதில் வசந்தா பயணம் செய்த படுக்கையின் கீழ் பகுதியில் செயின் இருந்தது தெரியவந்தது. செயினை பத்திரமாக போலீசார் மீட்டு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இது குறித்து வசந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வசந்தாவின் மருமகன் ஸ்ரீதரன் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து நகையை பெற்றுக் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News