உள்ளூர் செய்திகள்

வேகத்தடை அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-11-23 09:49 GMT   |   Update On 2022-11-23 09:49 GMT
  • தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது.

பு.புளியம்பட்டி:

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்லும் முக்கிய சாலையில் தாசம்பாளையம் கிராமம் உள்ளது.

பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி வரை தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, ரோடு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் இருந்து மைசூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் அதி வேகத்தில் செல்வதால் கடந்த ஒரு மாதமாக தாசம்பாளையம் கிராமம் அருகே ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்தனர்.

மேலும் தாசம்பாளையம் கிராமத்தில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதுவும் இதுவரை செய்யப்படாததால் இன்று காலை தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News