உள்ளூர் செய்திகள்

ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் நரி தின்ற ஆடு.

ஆடுகளை கொன்று குவித்த நரிகள்

Published On 2023-05-09 15:00 IST   |   Update On 2023-05-09 15:00:00 IST
  • ஆடுகளை நரிகள் கடித்து கொன்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
  • நரிகளை பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணையின் நீர்த்தேக்க பகுதியான கொடுமணல் கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த ஆடுகளை சமீபகாலமாக அங்கு சுற்றி திரியும் நரிகள் கடித்து கொன்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொடுமணல் தெற்கு ஆத்துத்தோட்டம் பகுதியில் வசிக்கும் விவசாயி பழனிசாமி என்பவர் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் 8 ஆடுகளை நரி கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டன.

அதேபோல் சின்னச்சாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சுப்பிரமணியம் என்பவரின் 4 வெள்ளாடுகளையும், வடகால தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் 2 ஆடுகளையும்,

குப்பிச்சாந்தோட்டத்தை சேர்ந்த காளியாத்தாள் என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சாம்பக்காட்டு தோட்டத்தை சேர்ந்த பழனி குப்புசாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும் நரிகள் கடித்து கொன்று விட்டது.

இதுகுறித்து கொடுமணல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,

திருப்பூர் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் நீர் நிலைகள் கெட்டுவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.

ஒரத்துப்பாளையம் அணையின் நீர் தேக்க பகுதிக்குள் முள் செடிகள் அதிக அளவில் வளர்ந்து விட்டதால் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால் அங்கு நரிகள் அதிக அளவில் உள்ளது. இந்த நரிகள் இரவு நேரங்களில் எங்கள் ஆட்டு பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று வருகிறது.

இதுவரை கொடுமணல் பகுதியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை நரிகள் கடித்து கொன்று பாதி தின்றுவிட்டு போய்விடுகிறது.

ஒரத்துப்பாளையம் அணையின் மறுபகுதியான தம்ம ரெட்டிபாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை நரிகள் கொன்று விட்டது.

இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியான நொய்யல் ஆற்று பகுதிக்குள் உள்ள முள் செடிகளை அகற்றுவதுடன் நரிகளை பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News