உள்ளூர் செய்திகள்

அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா

Published On 2023-07-14 09:19 GMT   |   Update On 2023-07-14 09:19 GMT
  • ஆடிப்பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
  • 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த ஆடிப் பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி பூச்சாட்டுடன் பண்டிகை தொடங்க உள்ளது. 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.

இதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துதல், தற்காலிக கடைகள் புதுப்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி பகுதி வரை அமைப்பதற்கான ஏலம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.

இதேபோல் அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் தண்ணீர் பந்தல் வனப்பிரிவு வரையான பகுதிக்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மாறன் தலைமையில் ஏலம் நடைபெற உள்ளது.

மேலும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மோகனப்பிரியா, மற்றும் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.

Tags:    

Similar News