உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை

Published On 2023-03-11 15:16 IST   |   Update On 2023-03-11 15:16:00 IST
  • கட்டிடம் விபத்து குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்தார்
  • பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மொடக்குறிச்சி:

சோலார் அருகே மோள கவுண்டன் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்களும், 112 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மோள கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைபள்ளியில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிட அறையை காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் திறந்து வைத்தனர்.

அப்போது ஜன்னல் அருகே உள்ள சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

உடனே அந்த அறையில் செயல்பட்டு வந்த 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஸ்மார்ட் வகுப்பிற்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்து படிக்க வைத்தனர்.

தற்பொழுது அந்த பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் பல இடங்களில் விரிசல் விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் தலைமை ஆசிரியை இருக்கும் அலுவலகத்தின் அறையின் கட்டிடமும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் பலமுறை பள்ளி ஆசிரியர்களும், பொது மக்களும் பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தருமாறு பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்டிடம் விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News