உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகள்- பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை
- பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
- யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜார்க்கலட்டி அருகே உள்ள முத்துார் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன.
அவற்றை நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது சம்பத் நகர், பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதூர் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.
இந்த யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. 6 யானைகள் நடமாட்டத்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.