உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கூரையை பிரித்து உணவு தேடிய யானைகள்

Published On 2022-08-06 10:30 GMT   |   Update On 2022-08-06 10:30 GMT
  • மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது.
  • 6 யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

வடவள்ளி

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வளையக்குட்டை மகாலட்சுமி கோவில் செல்லும் வழியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது.

இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானையை விரட்ட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இன்று அதிகாலை 2 மணிக்கு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. பின்னர் அங்குள்ள மணி என்ற சந்தோஷ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த 6 யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

சத்தம் கேட்டு சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். யானை நிற்பதை பார்த்த அவர்கள் பயத்தில் வீட்டை பூட்டி உள்ளேயே இருந்து கொண்டனர்.சிறிது நேரத்தில் ஒரு யானை மட்டும் விளை நிலத்தை விட்டு வெளியேறி சந்தோஷின் வீட்டின் அருகே வந்தது.

பின்னர் வீட்டின் மேற்கூரையை பிரித்து தும்பிக்கையை உள்ளே விட்டு அரிசி ஏதாவது உள்ளதா? என தேடி பார்த்தது.

ஆனால் ஒன்றும் இல்லாததால் நீண்ட நேரம் யானை வீட்டின் பின் பகுதியிலேயே நின்றது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், யானை கூட்டம் ஒரு வாரமாக வளையங்குட்டை, அட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வருகிறது. மேலும் விளை நிலங்களையும் சேதப்படுத்துகிறது. எனவே இங்கு சுற்றி திரியும் யானை கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News