உள்ளூர் செய்திகள்

குன்னூரில் மண்ணில் புரண்டு விளையாடும் யானைகள்

Published On 2022-06-10 10:19 GMT   |   Update On 2022-06-10 10:19 GMT
  • குன்னூர் பகுதியில் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன.
  • யானைகள் விளையாடி மகிழ்வது சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.

ஊட்டி, ஜூன்.10-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. கூடலூர், குன்னூர் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

தற்போது பலாப்பழ சீசன் நடப்பதால் யானைகள் பலாப்பழத்தின் வாசனை அறிந்து அவற்றை தேடி வந்து உட்கொள்கின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இவற்றில் காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன. குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள் கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் சுற்றித்திரிகின்றன.

சாலையை ஒட்டியுள்ள மண்மேட்டில் புரண்டு அந்த யானைகள் உற்சாகத்தில் திளைக்கின்றன. மேலும் ஒரு யானையை மற்றொரு யானை விரட்டியும் விளையாடிய படி உள்ளன. இந்த காட்சிகளை சுற்றுலாபயணிகள் ரசித்தபடி பார்த்து செல்கிறார்கள்.

அவ்வப்போது அந்த யானைகள் சாலையையும் கடந்து வந்து விடுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையை கவனத்துடன் கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுற்றுலாபயணிகள் ஆர்வத்தில் செல்போனில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், யானைகளுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News