கரும்புக்கட்டுகளை எடுக்கும் வேகத்தில் லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ஒற்றை யானை
- யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார்.
- காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகள் கரும்பை தின்பதற்காக வனச்சாலையில் வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சாலையில் சுற்றி திரிகின்றன.
அவ்வாறு கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்து வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்த ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது. யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார். உடனே யானை லாரியின் முன்பக்கம் நின்று தும்பிக்கையால் கரும்பை எடுத்த போது லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பின்னர் லாரியில் இருந்து கரும்பை எடுத்துக்கொண்டு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை லாரியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன் நகர் கிராமத்தில் ரவி என்கிற விவசாயி தனது வீட்டை ஒட்டி தோட்டம் அமைத்துள்ளார். தோட்டதுக்குள் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் தோட்டத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி மற்ற விவசாயிகளுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானையால் சேதம் அடைந்தன.