மின்கம்பம் சரிந்து விபத்து- படுகாயம் அடைந்த மின்வாரிய ஊழியர் மருத்துவமனையில் உயிரிழப்பு
- உயிருக்கு போராடிய ஊழியர் விஜயகுமாரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- விஜயகுமாரின் தந்தை முத்து, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார்(வயது24). இவர் கீழானூர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கீழானூர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருந்த மின் கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்கம்பம் சரிந்தது.
இதில், படுகாயம் அடைந்த விஜயகுமார் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தினர். பின்னர், அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரின் தந்தை முத்து, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.