உள்ளூர் செய்திகள்

மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் பழனிக்கு வரும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காப்பி

Published On 2024-11-29 09:59 IST   |   Update On 2024-11-29 09:59:00 IST
  • தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு.
  • குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் வழக்கத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோ விலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி தேவஸ்தானம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மோருக்கு பதிலாக சுடச்சுட சுக்கு காப்பி இலவசமாக வழங்கப்படுகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோவில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கும், தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் மலைக்கோவிலில் தினமும் காலை முதல் இரவு வரை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News