உள்ளூர் செய்திகள்

வெளியூர்களுக்கு பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இரவில் குடும்பத்துடன் தவித்த பயணிகள்

Published On 2023-04-30 10:14 GMT   |   Update On 2023-04-30 10:14 GMT
  • சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தை விட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
  • போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

போரூர்:

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தங்கி இருக்கும் பலர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் வார விடுமுறை மற்றும் நாளை மே தின விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பயணிகளில் வசதிக்கேற்ப கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

நேற்று இரவும் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தை விட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு இல்லாமல் வந்த பயணிகள் கிடைக்கின்ற பஸ்களில் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு ஏறி சென்றனர்.

கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டதாக தெரிகிறது. மேலு இரவு 10.30மணி முதல் இந்த இடங்களுக்கு செல்ல பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பஸ் நிலைய வளாகத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் இருக்கையில் அமர கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் பலர் தங்களது உடமைகளுடன் செய்வது அறியாமல் நின்றனர். இதனால் இரவு முழுவதும் பயணிகள் குடும்பத்துடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையால் மீண்டும் முன்பு போல் பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News