உள்ளூர் செய்திகள்

பஸ் டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்.

கிழக்கு கடற்கரை சாலையில் இலவச மகளிர் பஸ்சை குடிபோதையில் ஓட்டிய டிரைவர்: மரக்காணம் அருகே திடீர் பரபரப்பு

Published On 2023-10-27 09:17 GMT   |   Update On 2023-10-27 09:17 GMT
  • பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது.
  • அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இருந்து மரக்காணம் வழியாக ஓமீப்பேருக்கு தடம் எண் 61-ல் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் இன்று காலை 10 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்புத்துப்பட்டிலிருந்து புறப்பட்டது. இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலப்பாக்கம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, சாலையில் சென்ற வாகனங்களை மோதுவது போல சென்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அலறினர். இதையடுத்து பெண் பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள் பஸ்சினை சாலையோரத்தில் நிறுத்த சொல்லி டிரைவரிடம் வலியுறுத்தினர்.

சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதுவதை போல பஸ்சினை ஓட்டிய டிரைவர், ஒரு வழியாக சமாளித்து நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கூனிமேட்டில் நடந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் பங்கேற்ற மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார், மரக்காணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர். உடனடியாக சாலையோரத்தில் இருந்த பஸ்சிற்குள் போலீசார் சென்றனர். அங்கிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதில், டிரைவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News