ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்கி ஏமாற வேண்டாம் - பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
- கடன் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- கடன் செயலி மூலமாக பாதிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகாா்கள் வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலிகளின் நிபந்தனைகளை படித்து பாா்க்காமல் கடன் வாங்கி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை பிரிவு சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,திருப்பூா் மாவட்டத்தில் கடன் செயலி மூலமாக பாதிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகாா்கள் வருகின்றன.
இதில், எளிதாக கடன் கிடைக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளைப் படித்துப் பாா்க்காமல் ஒப்புதல் அளித்து பொதுமக்கள் கடன் பெறுகின்றனா். ஆனால் குறிப்பிட்ட தேதி முடியும் முன்பாகவே கடன் திருப்பிச் செலுத்தக்கூறி தொந்தரவு செய்கின்றனா். அதேவேளையில் பணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் புகைப்படத்தை மார்பிங் செய்து அவா்களது கைப்பேசி பதிவில் உள்ள எண்களுக்கு அனுப்பி அவமானப்படுத்தக்கூடும். ஆகவே, கடன் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.