ஆலந்தூர் பஸ் டெப்போ பக்கம் மறந்தும் போயிடாதீங்க... அசுத்தமான காற்று அதிகமா வீசுதாம்
- காற்று மாசை பொறுத்தவரையில் ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- சென்னையில் காற்றின் தரம் மோசமாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னையில் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பது பற்றி நேஷனல் கிளீன் ஏர் புரோகிராம் (என்.சி.ஏ.பி.) விரிவான ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆலந்தூர் பஸ் டெப்போ இருக்கும் பகுதிக்கு யாரும் சென்றுவிடாதீர்கள் என்று எச்சரிக்கும் அளவுக்கு காற்றின் மாசு மிகவும் அசுத்தமாகி இருப்பது தெரியவந்துள்ளது.
புழுதி பறந்த காற்று மூச்சுமுட்டவைக்கும் வகையில் மிகவும் அசுத்தமாக ஆலந்தூர் பகுதியில் வீசிக்கொண்டிருப்பது கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை பொறுத்தவரையில் ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் காற்றின் மாசு அளவு பல மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆலந்தூர் பஸ் டெப்போ பகுதியில் 102 என்கிற அளவில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பெருங் குடியில் 89, எண்ணூர் காந்திநகரில் 81, கொடுங்கை யூரில் 75, சி.பி.சி.பி. என்கிற அளவிலும் காற்றின் மாசு அதிகரித்துள்ளது. அரும்பாக்கம், வேளச்சேரி, மணலி, ராயபுரம் உள்ளிட்ட இடங்களிலும் காற்றின் மாசு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'சென்னையில் காற்றின் தரம் மோசமாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது' என்று தெரிவித்தார்.
சென்னை மாநகர சாலைகளில் பெரும்பாலான வற்றில் குழிகள் தோண்டப் பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் போது தூசி பறக்காமல் இருக்க துளி அளவு கூட நடவடிக் கைகள் எடுப்பது இல்லை.
அதேநேரத்தில் குண்டும் குழியுமாக மாறி மணல் சூழ்ந்திருக்கும் சாலைகளும் அதிகம் உள்ளன. இது போன்ற சாலைகளில் இருந்துதான் அதிக அளவில் தூசி பறந்து காற்று மாசு படுகிறது. இதுபோன்ற சாலைகளை சீரமைத்து காற்று மாசை தடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காற்று மாசை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சென்னை, திருச்சி, தூத்துக் குடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களை மாசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் திறந்த வெளி பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை உருவாக்கி அதில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வரையிலான தாவரங்களை நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுப்பது போன்ற பல்வேறு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் தீவிரமாக மேற்கொண்டால் காற்று மாசு தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.