தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்
- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது
- புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 8.12.2022 வரை நடக்கிறது. வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.
ஆகையால் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறம் முகாம்களில் சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, ஆதார் விவரம் சேர்க்க படிவம் 6ஏ, நீக்கம் செய்ய 7, பெயர், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பணிகளில் தி.மு.க.வினர் மெத்தன போக்கு காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.