உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய தி.மு.க கவுன்சிலர்

Published On 2023-07-25 15:32 IST   |   Update On 2023-07-25 15:32:00 IST
  • மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன
  • 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத்தலைவராக அருள்வடிவு ஆகியோர் உள்ளனர்.

இந்த நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், சீரான குடிநீர் விநியோகம், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க வில்லை என கூறப்படுகிறது. ஜம்ரூத்பேகம் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே 11-ம் வார்டில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஜம்ரூத்பேகம் வீட்டிற்கு சென்று குப்பைகளை அகற்ற வலியுறுத்தினர்.

இதனால் வேதனை அடைந்த ஜம்ரூத்பேகம் மகன்களுடன் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுவது என்று முடிவு செய்தார். இதன்படி அவர் 11-வது வார்டுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

மேட்டுப்பாளையம் வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Tags:    

Similar News