உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் இடையே தகராறு: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-06-26 10:13 GMT   |   Update On 2022-06-26 10:14 GMT
  • 2 தரப்பினரையும் அழைத்து 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
  • பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னேரி:

பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் கோட்டை குப்பம், ஆண்டிகுப்பம், நடுவூர் மாதா குப்பம், கிராமத்தினர் சுழற்சி முறையில் அண்ணா மலைச்சேரி வடக்கு திசை வரையிலும், கிழக்கு திசை முகத்து வாரம் வரையிலும் பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த 8 மாதத்திற்கு முன்பு மீன்பிடிப்பதில் இருதப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி ஒரு தரப்பினர் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வத்திடம் புகார் மனு அளித்தனர். இரு தரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.

எனினும் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை மீன்பிடி தொழில் செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 2 தரப்பினரையும் அழைத்து 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. மே 8-ந்தேதி பழவேற்காடு மீனவர் கூட்டமைப்பு சார்பில் சமாதான கூட்டம் நடத்தியும் முடிவு எட்டப்பட வில்லை.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் பிரச்சினை குறித்து மீனவ கூட்டுறவு சங்க தலைவர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களை பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News