உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் நடந்த கிடா விருந்தில் தகராறு: துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது

Published On 2022-11-14 10:37 IST   |   Update On 2022-11-14 10:37:00 IST
  • கறி விருந்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
  • திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமங்கலம்:

மதுைர மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தை சேர்ந்தவர் தனசேகரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டுப் பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று கிடா வெட்டி கறி விருந்து வைத்தார்.

இதில் பங்கேற்குமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மதுபோதையில் மதுரை கீழப்பனங்காடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதகிரி என்பவருக்கும், திருமங்கலம் அருகே உள்ள அ.தொட்டியபட்டியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வேதகிரி, தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு மிரட்டினார். கறி விருந்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கணபதி, வேதகிரியின் அலுவலக உதவியாளர் சக்திவேல், கிடா விருந்து வைத்த தனசேகரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் ஆர்.டி.ஓ. சவுந்தர்யா, தாசில்தார் சிவராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டனர்.

கறி விருந்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய வேதகிரியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் மதுரையில் பதுங்கி இருந்த வேதகிரியை நள்ளிரவில் போலீசார் கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான வேதகிரி காங்கிரஸ் பிரமுகர் ஆவார். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News