உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி தற்கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published On 2023-07-08 14:56 IST   |   Update On 2023-07-08 14:56:00 IST
  • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர்.
  • போலீஸ் துறை இன்று தி.மு.க அரசுக்கு அடிமையாக இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை அ.தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அரசு பதவியேற்று கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியார் ஆகியோர் மக்கள் எந்த திட்டம் கேட்டாலும் அதனை செய்து கொடுத்து வந்தார்.

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்ததும் அவர்கள் தான். கோவையில் ஸ்மார்ட் சிட்டி, அத்திக்கடவு, அவினாசி திட்டம், 6 இடங்களில் மேம்பாலங்கள் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள்.

அதனால் தான் தமிழகம் முழுவதும் சாரை, சாரையாக பொதுமக்கள் அ.தி.மு.க.வில் வந்து சேர்ந்து வருகின்றனர்.

தற்போது மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர். சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச்சூவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நன்றாக இருந்தவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது போலீஸ் துறைக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.

கோவையில் இருக்க கூடிய ஐ.ஜி. அவரை அழைத்து பேசியிருக்கிறார். அவரிடம் விடுமுறை வேண்டுமா என்று கேட்கவில்லை. அரசு அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்கிறார்கள். அது எந்தளவுக்கு என்பது விசாரித்தால் தான் தெரியும்.

தற்போது நாம் நல்ல ஒரு போலீஸ் அதிகாரியை இழந்து இருக்கிறோம். எனவே எடப்பாடியார் கூறியது போன்று, டி.ஐ.ஜி. தற்கொலை சம்பந்தமாக சி.பி.ஐ. உரிய விசாரணை நடத்த வேண்டும்.

சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும். அது என்ன என்பதை அவர்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். டி.ஐ.ஜியின் மரணம் என்பது மர்மமாகவே உள்ளது.

போலீஸ் துறை இன்று தி.மு.க அரசுக்கு அடிமையாக இருந்து பணியாற்றி வருகிறார்கள். போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து பணி வாங்குகிறார்கள்.

திமுகவில் எவ்வளவு ஊழல்கள் நடக்கிறது. ஆனால் அவர்களுடன் கூட்டணியில் இருக்க கூடிய கூட்டணி கட்சிகள் அவை எதையும் வெளி கொண்டு வருவதுமில்லை. அது பற்றி எங்கும் வாய் திறப்பதுமில்லை. மவுனம் காக்கின்றனர்.

எங்களை பா.ஐனதாவுக்குஅடிமை என்று பேசினார்கள். ஆனால் நாங்கள் காவிரி பிரச்சனை என்று வரும்போது 23 நாட்கள் பாராளுமன்றத்தை இயங்க விடாமல் புறக்கணித்தோம். ஆனால் அவர்கள் அப்படி செய்தார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.

திமுககூட்டணி கட்சிகள் அனைத்தும் எது நடந்தாலும் தி.மு.கவிற்கு ஜால்ரா போடுவதை மட்டுமே பழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.திமுக வெற்றி பெறும் எடப்பாடி யார் முதல்-அமைச்சர் ஆவார். எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சி செய்த தவறை சுட்டிக்காட்டும் ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம் எல் ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News