கோவை நகரில் 400 பனை மரக்கன்றுகள் நட முடிவு
- குளங்களின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
- தூத்துக்குடியில் இருந்து 400 பனை மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன.
கோவை,
கோவை மாநகரில் உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்பட 9 குளங்கள் உள்ளன.
இந்த குளங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர அந்த குளங்களின் மக்கள் பொழுது போக்குவதற்காக பொழுது போக்கு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவற்றில் மக்கள் பொழுது போக்கும் வகையில் பல அம்சங்கள் உள்ளன.
மக்கள் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அங்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.
இதற்கிடையே குளங்களின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பனை மரக்கன்றுகள் நடவு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பனை மரங்களின் வேர்கள் மண் அரிப்பை தடுக்கும் தன்மை கொண்டதாகும். இதையடுத்து தூத்துக்குட்டியில் இருந்து 400 பனை மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த மரக்கன்றுகளை எந்தெந்த குளங்களின் கரைப்பகுதிகளில் நடவு செய்வது என ஆய்வு செய்கிறோம். பருவ மழை காலம் தொடங்கும் முன்னர் நடவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.