கோத்தகிரியில் கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
- சகோதரர்கள் 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
- தோம்னிக் சேவியர் கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்
கோத்தகிரி,
கோத்தகிரி பாப்பிஸ்ட் காலனியை சேர்ந்தவர் தோம்னிக் சேவியர் என்ற ரவி. கூலி தொழிலாளி.
இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோத்தகிரி தர்மோன் பகுதியை சேர்ந்த சங்கீத் குமார், பாலா என்பவர்களிடம் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கினார். இதற்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டியும் கட்டி வந்தார்.
மாதந் தவறாமல் வட்டி செலுத்தி வந்த தோம்னிக் சேவியரால், அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தோம்னிக் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது வழியில் வட்டிக்கு பணம் கொடுத்த சகோதரர்களான சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் வந்தனர். அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்கான வட்டியை கேட்டுள்ளனர். அதற்கு அவர் விரைவில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் பணத்தை தராவிட்டால், உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன தோம்னிக் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் தோம்னிக் சேவியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார், சங்கீத் மற்றும் பாலா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.