உள்ளூர் செய்திகள்

சென்னையில் சாலையோரங்களில் தொங்கும் கேபிள்களால் விபத்து அபாயம்

Published On 2023-06-23 08:28 GMT   |   Update On 2023-06-23 08:28 GMT
  • கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.
  • சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்.

சென்னையில் சாலையோர பகுதிகளில் தொங்கும் கேபிள் ஒயர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. சென்னையில் இணைய தளம், கேபிள்டி.வி உள்ளிட்ட சேவைகளுக்காக சாலையோரங்களில் கேபிள்கள் அமைக்கப்பட்டு வீடுகள், அலுவலகங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.

சென்னை மாநகர தெருக்களில் பல இடங்களில் தெருவிளக்கு கம்பங்களை ஆக்கிரமித்து கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரம்பூர், உள்ளிட்டபகுதிகளில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் இந்த ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. பல இடங்களில் கம்பங்களை நட்டு கேபிள் ஒயர்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர்.

சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். தற்போது வேப்பேரி, பசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலை உள்ளது இதனை சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News