உள்ளூர் செய்திகள்

கரும்பு பயிரிடப்பட்ட வயல்களில் காணப்படும் செவ்வழுகல் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு நடந்தது.

கரும்பு பயிரிடப்பட்ட வயல்களில் செவ்வழுகல் நோய் தாக்குதல்: பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு

Published On 2023-06-24 12:22 IST   |   Update On 2023-06-24 12:22:00 IST
  • சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் அதிகளவில் செவ்வழுகல் நோய் தாக்குதல் காணப்பட்டது.
  • பாதிக்கப்பட்ட கரும்பை பிளந்து பார்த்தால் ஆங்காங்கே சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கலந்து திட்டு திட்டாக காணப்படும்.

கடலூர்:

பண்ருட்டி வட்டாரம் சிறுவத்தூர் ஏரி பாளையம் போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் அதிகளவில் செவ்வழுகல் நோய் தாக்குதல் காணப்பட்டது. இதனை பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி ஆய்வு செய்தார். ஆய்வின் போது பாரி சர்க்கரை ஆலை நிறுவன அலுவலர் சுந்தர் கணேஷ், வேளாண்மை துணை அலுவலர் ராஜ்குமார், வேளாண்மை உதவி அலுவலர் சவுந்தரமேரி, முன்னோடி விவசாயி சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் பார்த்த சாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

பண்ருட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் ஒருவித பூஞ்சானம் உருவாக்கக்கூடிய செவ்வழுகல் நோய் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட வயல்களில் கரும்பு பயிரின் இலைகளானது மஞ்சள் நிறமாக மாறி பின் கீழிருந்து மேல் நோக்கி காய்ந்து விடும். மேலும் இலைகளின் நடு நரம்புகள் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. பாதிக்கப்பட்ட கரும்பை பிளந்து பார்த்தால் ஆங்காங்கே சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கலந்து திட்டு திட்டாக காணப்படும். இதனால் கரும்பு அழுகிய சாராய வாடை வீசும்.

இந்த நோயை கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்வதற்கு முன் கரும்பு கரணைகளை கார்பெண்டசிம் 50 நனையம் தூள் என்ற பூஞ்சானக் கொல்லியினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து அதனுடன் 2.5 கிலோ யூரியாவை கலந்து அதில் கரும்பு கரணைகளை நனைத்து பின் நடவு செய்யலாம். இந்த நோய்க்கு மிதமான எதிர்ப்பு உள்ள CO 86032, CO 86249, COSI 95071, COG 93076, COC 22, COSI 6, COG 5 போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம். அதிகம் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பாதிக்கப்பட்ட கரும்பு குற்றுகளை அகற்றிய பின் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தயோபெனைட் மீத்தைல் அல்லது ஒரு கிராம் கார்பன்டசிம் போன்ற பூஞ்சானக்கொல்லி மருந்துகளை கரைத்து மண்ணில் ஊற்றி இந்த நோயின் தீவிரத்தையும் பரவுதலையும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News