உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதியில் சி.ஆர்.பி "ரேபிட் ஃபோர்ஸ்" அதிரடிப்படை வீரர்கள் திடீர் ஆய்வு

Published On 2023-08-17 15:31 GMT   |   Update On 2023-08-17 15:31 GMT
  • செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
  • மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது.

மாமல்லபுரம்:

மத்திய ரிசர்வ் போலீசின் ஒரு பிரிவான "ரேபிட் ஃபோர்ஸ்" அதிரடிப்படை என்பது தேர்தல், பேரிடர், கலவரம், தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அவசர நிலை பாதுகாப்பிற்கு மத்திய அரசு பிரகடனம் செய்யும் போது ராணுவத்திற்கு இணையாக களமிறங்கும் படையாகும். இப்படையினர் ஆண்டிற்கு ஒருமுறை பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ரிசர்வ்டு பகுதிகளை ஆய்வு செய்து ஒத்திகை போன்று பாதுகாப்பு பயிற்சி எடுப்பது வழக்கம்.

அதேபோல் நேற்று செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு (பயிற்சி) செய்தனர். அதில் முக்கிய இடமாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்சுனன்தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதிகளை கோவையில் இருந்து, துணை கமெண்டோ ஜின்சி பிலிப் தலைமையில் வந்திருந்த 30 ரேபிட் ஃபோர்ஸ் வீரர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன், திபு திபு என வாகனத்தில் இருந்து இறங்கி ஆய்வு பயிற்சியை மேற்கொண்டனர்.

பின்னர், அப்பகுதிகளை சுற்றி பார்த்து, நுழைவு வாயில், அவசர நிலை வெளியேற்று பகுதி, தற்போதைய பாதுகாப்பு, காவல் நிலைய தூரம், மருத்துவமனை தூரம், உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு செய்தனர். கடைசியாக கடற்கரை கோயிலை சுற்றி பார்த்து ஆய்வு பயிற்சி செய்த பின்னர் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்தனர்.

இதனால் மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது. பின்னர் இது அவசரநிலை பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்பது பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

Tags:    

Similar News