உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பகுதியில் கொசுக்கடிக்கு பயந்து கடற்கரையில் ஓய்வெடுக்கும் பசுமாடுகள்

Published On 2022-11-24 07:10 GMT   |   Update On 2022-11-24 07:10 GMT
  • அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது.
  • கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை.

விழுப்புரம்:

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு சாலை ஓரங்கள் குளம் குட்டை போன்றவைகளில் நீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்குகிறது. அதிலும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் பொதுமக்கள் கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்கவே பெரும்பாடு படுகின்றனர். இதுபோல் இரவு நேரங்களில் தாக்கும் கொசுக்களை விரட்ட கொசு விரட்டிகள் வைத்தால் கூட கொசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொசுக்கடிகளிலிருந்து மனிதர்களே தப்பிக்க அவதிப்படும் நிலையில் கால்நடைகளும் தப்பவில்லை. இது போன்ற கொசுக்கடிகளிலிருந்து தப்பிக்க சில கால்நடைகள் கூட்டம் கூட்டமாக கடற்கரை ஓரம் சென்று இரவு நேரங்களில் தங்கி ஓய்வெடுத்து வருகின்றது. கடற்கரை ஓரம் காற்று வீசுவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருப்பதில்லை. இதனால்தான் கால்நடைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள இதுபோன்று கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கிறது என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். 

Tags:    

Similar News