உள்ளூர் செய்திகள்

ஐஸ்அவுசில் பொதுமக்களை தெறிக்கவிட்ட வெறிபிடித்த மாடு- 5 பேரை முட்டி தூக்கிய பிறகு போராடி பிடித்த போலீசார்

Published On 2023-09-15 13:07 IST   |   Update On 2023-09-15 14:51:00 IST
  • நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.
  • நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் ரோடுகளில் அலையும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு மட்டுமில்லாமல் பொது மக்களுக்கும் ஆபத்து நேரிடுகிறது. சூளைமேட்டில் ரோட்டில் சென்ற ஒரு சிறுமியை குத்தி தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரோட்டில் அலைந்து திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டி வைத்து உரிமையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் முழு அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஐஸ் அவுஸ் பகுதியில் பெசன்ட் ரோட்டில் நேற்று மாலையில் ஒரு மாடு மதம் பிடித்த யானை போல் உறுமியபடி அங்கும் இங்கும் ஓடியது.

கண்ணில் பட்டவர்களை முட்டி தள்ளியது. ஒருவர் பின் ஒருவராக மோதி தள்ளியதில் 5 பேர் ரோட் டில் விழுந்து உருண்டனர். அதை பார்த்ததும் பொது மக்கள் மாட்டிடம் இருந்து தப்பிப்பதற்காக தெறித்து ஓடினார்கள்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்தனர்.

மாடு நின்றதை பார்த்ததும் அவர்களும் மிரண்டனர். கிட்டே நெருங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து மாட்டு உரிமையாளரை வரவழைத்தனர். அவர் அழைத்தபடியே மாட்டை நெருங்கினார். ஆனால் மாடு அவரிடமும் பணியாமல் மோத வந்தது. இதனால் அவரும் ஓட்டம் பிடித்தார்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்து கட்டிப் போட்டார்கள்.

அப்போதுதான் மாட்டின் உடலில் நாய் கடித்த தடம் இருந்ததை பார்த்தனர். எனவே நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

Tags:    

Similar News